ரசிகர்களை சூடேற்றும் போட்டோக்களை போட்டோஷூட்கள் வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர் டிவி நடிகை ஷிவானி. இவரின் குளுகுளு போட்டோஷூட்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் பல லட்சம் ஃபாலோயர்களைக் குவிக்க, பிக்பாஸுக்குள்ளும் நுழைந்தார் ஷிவானி.
கிட்டத்தட்ட பிக்பாஸின் இறுதிவாரம்வரை வீட்டுக்குள்ளும் தாக்குப்பிடித்தார். மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ‘பிக் பாஸ்’ முடிந்தும் ஷிவானி குறித்த பேச்சுகள் ஓயவில்லை. ஷிவானியுடன் டிவி தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களில் நடித்தவர் அஸீம். 'அவரும் ஷிவானியும் முன்னாள் காதலர்கள், வைல்ட்கார்டு என்ட்ரி மூலம் அஸீமும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருக்கிறார்' என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிக்பாஸ் வீட்டுக்குள் போவதற்காக க்வாரன்டைனிலும் இருந்திருக்கிறார் அஸீம். இந்நிலையில்தான் மீண்டும் ஷிவானி - அஸீம் காதல் குறித்த செய்திகள் பரவ ஆரம்பித்திருக்கிறது.
அஸீமும் ஷிவானியும் தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் சமூக வலைதளங்கள் பரபரக்க உண்மை என்ன என அஸீமிடம் பேசினேன்.
‘’அவங்ககூட ‘பகல் நிலவு’ தொடர்ல ஜோடியா நடிச்சேன். பிறகு ‘ஜோடி’ நிகழ்ச்சியில நாங்க சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கோம். அதேப்போல ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல்லயும் நாங்க ரெண்டு பேரும் நடிச்சிருக்கோம். அந்த நாட்கள்ல ’சிறந்த ஜோடி’, ‘ரொமான்ட்டிக் ஜோடி’ங்கிற ரீதியில சில விருதுகளைத் தந்தாங்க. உடனே, அஸீம்-ஷிவானி லவ் பண்றாங்கங்கிற பேச்சு கிளம்பிடுச்சு.
உண்மையிலேயே எனக்கும் ஷிவானிக்கும் தொழில் ரீதியான தொடர்பு மட்டும்தான் உண்டு. மத்தபடி வேறெந்த தொடர்பும் கிடையாது. சில தினங்களுக்கு முன்பு எனக்கு விவாகரத்து கிடைச்சது. நான் இப்போ டிவோர்ஸி. அதைவெச்சு ஷிவானியுடன் கல்யாணம்னு கிளப்பி விட்டுட்டாங்களானு தெரியல. ஷிவானிக்காகத்தான் நான் என்னுடைய திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து வாங்கினேன்னு கூடச் சில பேச்சுக்களைக் கேட்க முடிஞ்சது. போதுங்க... அந்தப் பொண்ணையும் நிம்மதியா இருக்கவிடுங்க, என்னையும் நிம்மதியா நடிக்க விடுங்க'’ என்றார் அஸீம்.
அடுத்து கடைசிவரை நிகழ்ச்சியில் இருந்த ஷிவானிக்கும் பெரிய ஒரு வாய்ப்பு சேனலில் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஷிவானி ஹீரோயினாக நடிக்க ஒரு புதிய சீரியல் விஜய் டிவியில் விரைவில் தொடங்கயிருக்கிறது.
கடைசியாக விஜய் டிவியில் ஷிவானி நடித்தது ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் பாதியிலேயே கோபித்துக் கொண்டு வெளியேறி ஜீ தமிழ் சேனலுக்குப் போனார் ஷிவானி.
சரி, தொடங்க இருக்கிற சீரியலில் ஷிவானிக்கு ஜோடி யார் என்கிறீர்களா? ’கடைக்குட்டி சிங்கம்’ தொடரில் நடித்த அஸீம்தான் என உறுதியாகச் சொல்கிறது ஒரு சோர்ஸ்.