கோடை காலம் என்றாலே மனம் குளிர்ச்சியை தேட ஆரம்பிக்கும்... அதுவும் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டுக்கான கோடை வெப்ப நிலை இரண்டு அல்லது மூன்று டிகிரி அதிகமாக இருக்கும் என்கின்றன வானிலை கணிப்புகள்.
தகிக்கும் வெயில், வறண்டுபோகும் உடல், கொதிக்கும் தேகம் ஆகிய மூன்றே வார்த்தைகளில் தற்போதைய சூழ்நிலையைச் சொல்லிவிடலாம்.
கோடை காலத்தில் சூரிய உதயத்துக்கு முன் கண் விழிப்பது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். இந்தக் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிப்பது சிறந்தது. உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் நீராடுவது பயன்தரும். வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய் குளியல் செய்வதால், வெயில் கால நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
கற்றாழை கூழ் அல்லது எலுமிச்சையைத் தலையில் தேய்த்துக் குளிப்பதால் உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை அதிகரித்துக்கொள்ளலாம். நீரோட்டம் உள்ள ஆறுகளில் குளித்து, கோடை காலத்தைக் கடத்திய நம்முடைய முன்னோர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு. எனவே நீரோட்டம் மிக்க ஆறுகள், அருவிகளில் குளிப்பது உடலுக்குக் குளிர்ச்சியை மட்டுமல்லாமல் உற்சாகத்தையும் தரும்.
பேயன் வாழைப்பழம், சீத்தா, கொய்யா, திராட்சை, பலா, வெள்ளரி, முலாம் (கிர்ணி) போன்ற பழங்களை அடிக்கடி சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தட்பத்தைக் கொடுக்கும். வெயில் காரணமாக வறண்டுவிட்ட உடல்தாதுகளுக்கு வலுவூட்ட, உணவில் நெய்யைச் சற்று அதிகமாகச் சேர்த்துக்கொள்வது அவசியம். கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத், இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர் போன்றவை வேனிற் காலத்தைக் குளிர் விக்கும் பானங்கள்.
கோடை காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். நீரைக் குளிர்விப்பதற்குக் குளிர்பதனப் பெட்டியைவிட, மண்பானைகளே ஆரோக்கியமானவை. ஃபிரிஜ்ட்களில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அத்துடன் கிருமித் தொற்றுகளின் தாக்கம் பெருகவும் ஃபிரிட்ஜ் நீர் வழிவகுக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம்.
காசில்லாமல் ஏசி காற்று வாங்குவது எப்படி?
இப்போது வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கமாகத்தான் இருக்கும். கோடை வெயில் இப்போதிலிருந்தே வெயில் சுட்டெறிக்க ஆரம்பித்து விட்டது. எனவே நாம் இரவு தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம். இந்நிலையில் சூட்டுடன் காற்றடியின் சூடும் சேர்ந்தால் தூங்குவது மிகவும் சிரமமாகி விடுகிறது. இதற்கு இந்த எளிய வழியை பின்பற்றலாமே.
டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்து விட்டால் காற்றடியில் இருந்து வெளிப்படும் காற்றில் ஐஸின் குளிர்ச்சியை ரூம் முழுவதுமாக பரவிவிடும். ஐஸ் உருகினாலும் அதனை தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும் இதனால் நிம்மதியாக உறங்கலாம். தூக்கமும் கெடாது.